2020ம் ஆண்டு உலக அமைதி நாள் – திருத்தந்தையின் செய்தி
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, 2020ம் ஆண்டின் உலக அமைதி நாளுக்குரிய செய்தியின் தலைப்பு, “அமைதி, நம்பிக்கையின் ஒரு பயணமாக…” என்பதாகும்.
ஒவ்வோர் ஆண்டும், புத்தாண்டு நாளன்று கத்தோலிக்கத் திருஅவை, உலக அமைதி நாளைச் சிறப்பித்து வருவதையொட்டி, திருத்தந்தை, 2020ம் ஆண்டுக்கென வெளியிட்டுள்ள இச்செய்தியின் உப தலைப்பாக, உரையாடல், ஒப்புரவு மற்றும் சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்ற மூன்று அம்சங்களையும் இணைத்துள்ளார்.
பிரச்சனை மற்றும் தடைகளுக்கு முன் விளங்கும் நம்பிக்கை
ஐந்து பகுதிகளைக் கொண்ட இச்செய்தியில், “அமைதி, பிரச்சனை மற்றும் தடைகளுக்கு முன்னர், நம்பிக்கையின் ஒரு பயணம்” என்ற முதல் பகுதியில், அமைதிக்காக நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, எத்தனை தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும், முன்னோக்கிச் செல்ல நம்மை உந்தித்தள்ளுகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியைத் துவக்கியுள்ளார்.
சமுதாயத்தில் உள்ள பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற குறைபாடே, நம்முள், மோதல்களையும், போர்களையும் உருவாக்குகின்றன என்பதை, இப்பகுதியில் தெளிவுபடுத்தும் திருத்தந்தை, மனித சமுதாயம், தன் நினைவிலும், உடலிலும், போர்களின் காயங்களையும், வடுக்களையும் தாங்கி வாழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் நடுவே, நிலையற்ற தன்மையும், அச்சமும் உருவாகும் வேளை, அவற்றிற்கு தீர்வாக, மக்களிடையே உறவையும், உரையாடலையும் வளர்ப்பதற்குப் பதில், பகைமை உணர்வுகள் என்ற நஞ்சை இவ்வுலகம் விதைக்கிறது என்பதை, தன் ஜப்பான் நாட்டு திருத்தூதுப் பயணத்தில் இன்னும் ஆழமாக தான் உணர்ந்ததாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் முதல் பகுதியில் கூறியுள்ளார்.
நினைவு, ஒருங்கிணைப்பு, உடன்பிறந்த நிலை
“நினைவு, ஒருங்கிணைப்பு மற்றும் உடன்பிறந்த நிலை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட செவிமடுத்தலின் பயணமே, அமைதி” என்பது, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியின் இரண்டாம் பகுதி.
1945ம் ஆண்டு வரலாற்றில் என்ன நடந்தது என்பதை மனிதகுலத்தின் மனசாட்சிக்கு, தொடர்ந்து நினைவுறுத்தும் வண்ணம், அணுகுண்டு தாக்குதலிலிருந்து தப்பித்து ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வாழ்ந்துவருவோர், நமது நினைவுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வருகின்றனர் என்று, இப்பகுதியின் துவக்கத்தில், திருத்தந்தை கூறியுள்ளார்.
வரலாற்று நினைவுகளே, நம்பிக்கை என்ற தொடுவானத்தில் தோன்றும் ஒளிக்கீற்றுகள் என்பதை, இப்பகுதியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகிற்கு இன்று வெறுமையான வார்த்தைகளும், வாக்குறுதிகளும் தேவையில்லை, மாறாக, சமாதானம் செய்வோரின் சாட்சியம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
அமைதி வழிமுறை என்பது, பொறுமையாக, ஒருங்கிணைந்து, உண்மையையும், நீதியையும் தேடுவதற்கு மேற்கொள்ளப்படும் பயணம் என்றும், போர்களில் இறந்தோரின் நினைவுக்கு நாம் செய்யும் மரியாதை என்றும், திருத்தந்தை, இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாகும்பொருட்டு, கிறிஸ்து, தம் உயிரை அளித்தார் (காண்க. உரோமையர் 5:6-11) என்பது நம் கிறிஸ்தவ அனுபவம் என்பதை, இப்பகுதியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, நீதியின் வழியாக, ஒப்புரவைக் கொணர்வதில் திருஅவை மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்று எடுத்துரைத்துள்ளார்.
Comments are closed.