கிறிஸ்மஸ் இரவு திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
டிசம்பர் 24 இரவு 9.30 மணியளவில், புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.
திருப்பலியின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவை வணங்கி முத்தம் செய்தபோது, பன்னிரு நாடுகளின் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த சிறுவர், சிறுமியர் அவரைச் சுற்றி நின்றனர். அவர்களில், ஈராக், மற்றும் வெனிசுவேலா நாடுகளை பிரதிபலிக்கும் உடைகளில் இரு குழந்தைகள் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” (எசாயா 9:2). இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்ட இந்த இறைவாக்கு, நற்செய்தியில் நிறைவேறியது. இடையர்கள் இந்த ஒளியைக் கண்டனர். ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது (லூக்கா 2:9). இருளில் ஒளி தெரிந்தது என்பதன் பொருள் என்ன? அது இறைவனின் அருள் என்று, திருத்தூதர் பவுல் கூறியுள்ளார். “மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.” (தீத்து 2:11)
கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம், நமது வேலைகளில், வழக்கம்போல் மூழ்கியிருந்த வேளையில், கடவுள் தன்னையே தாழ்த்தி, நம்மிடையே வந்தார். நம் ஒவ்வொருவரையும் நோக்கி அவர் கூறுவது இதுதான்: “நீ என் கண்களில் விலையேறப்பெற்றவர். உன்னை நான் எப்போதும் அன்புகூருவேன்” அவர் கண்ணைப்பறிக்கும் ஒளியுடன் வரவில்லை, மாறாக, வறுமையில் பிறந்து, தன் அன்பின் செல்வத்தால் நம்மை வென்றார்.
“எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தி” இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி அறிவிக்கப்பட்ட இடையர்கள் புனிதர்கள் அல்ல, அந்தக் குழுவில் நாமும் ஒருவராக இருக்கிறோம். இடையர்களுக்கும், நமக்கும், “அஞ்சாதீர்கள்” (லூக். 2:10) என்று கடவுள் கூறுகிறார்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இத்தகைய அருள் நம்மை வந்தடையும்போது நாம் என்ன செய்யவேண்டும்? அந்தக் கொடையை வரவேற்கவேண்டும். நாம் கடவுளைத் தேடிச் செல்வதற்கு முன், அவர் நம்மைத் தேடிவருவதற்கு அனுமதிக்கவேண்டும். நமது திறமைகளைக் கொண்டு துவங்குவதற்குப் பதில், அவரது அருளில் துவங்கவேண்டும். அவர் நம்மீது கொண்டுள்ள மட்டற்ற, மதியற்ற அன்புக்கு முன், எந்த சாக்குபோக்கும் சொல்ல இயலாது. கிறிஸ்மஸ் காலத்தில் எழும் கேள்வி இதுதான்: “கடவுளால் அன்புகூரப்படுவதற்கு நான் என்னையே அளிக்கிறேனா? என்னைக் காக்கவரும் அந்த அன்புக்கு முன் நான் சரணடைகிறேனா?”
இத்தகைய பேரன்புக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஆனால், நம் வாழ்வு, நன்றி உணர்வின்றி செலவழிக்கப்படுகிறது. இயேசு என்ற கொடையை நாம் வரவேற்று, அவரைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுகிறோம். முதலில், நாம் மாறுகிறோம். அதன் வழியே, வரலாற்றை, திருஅவையை மாற்றுகிறோம்.
இதைத்தான், இயேசு இன்று இரவு நமக்குச் சொல்லித் தருகிறார். அவர், இவ்வுலகில் வந்தபோது, யார் மீதும், தன்னையும், தன் கொள்கைகளையும் திணிக்காமல், தன்னையே ஒரு கொடையாக வழங்கினார். நாம் நல்லவர்களாக மாறும்வரைக் காத்திருந்து, பின்னர் தன்னை அவர் கொடையாக வழங்கவில்லை, மாறாக, எவ்வித நிபந்தனையுமின்றி அவர் தன்னையே வழங்கினார்.
Comments are closed.