ஈராக்கில் மீண்டும் எழுப்பப்படும் அன்னை மரியாவின் பேராலயம்
ஈராக் நாட்டின் பாக்திதா (Bakhdida) நகரில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ISIS தீவிரவாதக் குழுவால் தீயிட்டு கொளுத்தப்பட்ட அமல உற்பவ அன்னை மரியாவின் பேராலயம், 2020ம் ஆண்டு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று, பாக்திதா பங்கு அருள்பணியாளர் Georges Jahola அவர்கள் CNA கத்தோலிக்கச் செய்தியிடம் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், ISIS தீவிரவாதக் குழுவால் சூறையாடப்பட்டு, தீயிட்டு கொளுத்தப்பட்ட அன்னை மரியாவின் பேராலயம், அப்பகுதியில் குடியேறிவரும் கிறிஸ்தவர்களால் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டின் நினிவே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இப்பேராலயம், 1932ம் ஆண்டு முதல், 1948ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக, அங்கு உழைத்து வந்த விவசாயிகள் வழங்கிய நிதிஉதவியால் கட்டப்பட்டதென CNA செய்தி மேலும் கூறியுள்ளது.
‘பெரும் அல்-தஹீரா அமல உற்பவ பேராலயம்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு உதவ, Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு முன்வந்துள்ளது.
2016ம் ஆண்டு ISIS தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நினிவே பள்ளத்தாக்கில், தற்போது, 6,900த்திற்கும் அதிகமான வீடுகள் மறு சீரமைக்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர் என்றும், இந்த இல்லங்களை கட்டியெழுப்ப Aid to the Church in Need அமைப்பு முன்வந்தது என்றும் அருள்பணி Jahola அவர்கள் கூறினார்.
கிறிஸ்தவ மதத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் சிரியா நாடும், நினிவே பள்ளத்தாக்கும் மீண்டும் கட்டியெழுப்படுவதில், ஹங்கேரி நாட்டின் அரசு உட்பட, பல்வேறு அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் ஆர்வம் கொண்டுள்ளன என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
Comments are closed.