புன்னகையின் முக்கியத்துவத்தைக் கண்டுணருங்கள்
வத்திக்கானிலும், திருப்பீடத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் நாம் அனைவரும், குழந்தை இயேசுவின் புன்னகையால் புதுப்பிக்கப்பட நம்மையே நாம் அனுமதிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தான் சந்தித்த திருப்பீட பணியாளர்களிடம் கூறினார்.
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு ஆசீர் பெறுவதற்காக, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், டிசம்பர் 21, இச்சனிக்கிழமை நண்பகலில் காத்திருந்த, வத்திக்கான் மற்றும், திருப்பீடத்தின் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் புன்னகையின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
புன்னகை நாடு
கடந்த மாதத்தில், இறுதியாக தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலிருந்து, புன்னகை பற்றிய சிந்தனை எழுந்தது என்றுரைத்த திருத்தந்தை, தாய்லாந்திலுள்ள மக்கள், மிகுந்த புன்முறுவலுடன் உள்ளதால், இவ்வாறு அந்நாடு அழைக்கப்படுகின்றது என்றும், அம்மக்களிடம் விளங்கும் சிறப்பான கனிவு, பெருந்தன்மை போன்ற நற்புண்புகள் அனைத்தும் அவர்களின் முகங்களிலும், செயல்களிலும் பிரிதிபலிக்கின்றன என்று கூறினார்.
புதிதாகப் பிறந்துள்ள குழந்தையைக் காண்கையில், அதைப் பார்த்து நாமும் புன்னகை புரிகிறோம், அக்குழந்தையும், தனது பார்வையால் அதற்குப் பதிலளிக்கின்றது, மேலும், அக்குழந்தையின் புன்னகை, மிகுந்த வல்லமை மிக்கது என்று கூறியத் திருத்தந்தை, அப்புன்னகை, ஊற்றுத் தண்ணீர் போல புதியதும், தூய்மையானதும் ஆகும், இன்னும், அது நம் குழந்தைப்பருவத்தின் மீது ஏக்கத்தை எழுப்புகின்றது என்றும் கூறினார்.
இயேசு, கடவுளின் புன்னகை
அன்னை மரியா, யோசேப்பு மற்றும், இயேசுவுக்கு இடையே இந்த புன்னகை தனித்துவமிக்க முறையில் விளங்கியது, இயேசு கடவுளின் புன்னகை என்றும், இறைத்தந்தை நம்மீது கொண்டுள்ள அன்பை, நன்மைத்தனத்தை வெளிப்படுத்துவதற்காக மனிதராய்ப் பிறந்த இயேசுவின் புன்னகையில், கன்னி மரியாவும், புனித யோசேப்பும், தங்கள் மீதும், இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தோர் மீதும் வைத்துள்ள கடவுளின் கருணையை கண்டுகொண்டனர் என்றும், திருத்தந்தை கூறினார்.
தீவனத்தொட்டியில் குழந்தை இயேசுவை நாம் காண்கையில் இதே அனுபவத்தை மீண்டும் வாழ்கிறோம் எனவும், நம்மிலுள்ள சிறந்தவற்றை மற்றவருக்கு வழங்குவதற்குத் தடைசெய்யும் அனைத்திலிருந்தும், குழந்தை இயேசுவின் புன்னகை நம்மைத் தூய்மைப்படுத்துவதாக எனவும் திருத்தந்தை கூறினார்.
நாளின் அதிகமான நேரங்களை வேலைகளில் செலவழிக்கிறோம், எனினும், வேலையின் தரம், குறிப்பாக, திருஅவைக்கும், கிறிஸ்துவின் பெயராலும் பணியாற்றுகையில், நாம் வாழும்முறை, மனித உறவுகளின் தன்மை போன்றவற்றைச் சார்ந்துள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
கடவுளின் புன்னகை
பல்வேறு காரணங்களுக்காக, சிலநேரங்களில் புன்னகை புரிய கடினமாக மாறுகிறது, அச்சமயத்தில் நமக்கு கடவுளின் புன்னகை தேவைப்படுகின்றது, இதற்கு நம் ஒரே மீட்பராகிய இயேசுவால் மட்டுமே நமக்கு உதவ முடியும், சிலவேளைகளில், அவரை நம் வாழ்வில் தெளிவாக அனுபவிக்கின்றோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நம் வாழ்வின் நிகழ்வுகள் எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருக்கையில், பாதுகாப்பாக இருப்பதாக உணருகின்றோம், துன்புறுவோரை மறக்கின்றோம், அந்நேரத்தில் நம் போலியான பாதுகாப்பை அகற்றுவதற்கும் கடவுளின் புன்னகை தேவைப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
Comments are closed.