அரசியல்வாதிகள் கடவுளின் குரலுக்கு செவிமடுப்பதில்லை
அரசியல்வாதிகள் உண்மையிலேயே கடவுளின் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாய் இருந்தால், லெபனான் நாடு தற்போதைய பொருளாதார மற்றும், நிதி நெருக்கடி சூழலை எதிர்கொண்டிருக்காது என்று, அந்நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
லெபனான் நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து, டிசம்பர் 15, இஞ்ஞாயிறு திருப்பலியில் குறிப்பிட்ட அந்நாட்டு மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை போன்ற காரணங்களுக்கு அரசியல்வாதிகளைக் குறை கூறினார்.
லெபனானில், மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமானோர் வறுமைக்கோட்டிற்குக்கீழும், ஏறத்தாழ பாதிப்பேர் வேலைவாய்ப்பின்றியும் உள்ளனர் என்று உரையாற்றிய கர்தினால் ராய் அவர்கள், நாட்டில் ஏறத்தாழ இரு மாதங்களாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு உண்மையான காரணிகளை ஆய்வு செய்யுமாறு அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டார்.
அரசியல்வாதிகள், கடவுளின் குரலுக்குச் செவிசாய்த்தால், அவர்கள் பொதுப்பணத்தைக் கையாடல் செய்யமாட்டார்கள், அமைச்சகங்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டு இருக்காது, மக்களின் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுக்காமல் இருக்கமாட்டார்கள் எனவும், கர்தினால் ராய் அவர்கள் கூறியுள்ளார்.
லெபனானில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம், சுன்னி முஸ்லிம் பிரிவைச் சார்ந்த பிரதமர் Saad Hariri அவர்களை பதவி விலக வைத்துள்ளது. எனினும், அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், அவரை பெரும்பான்மையை எண்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன
Comments are closed.