நற்செய்தி வாசக மறையுரை (டிசம்பர் 20)
குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு தீவில் தங்கி, அங்கிருந்த மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்து வந்தார். அவருடைய வார்த்தையைக் கேட்டு, பலரும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு பின்பு அவர்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதனால் அந்தத் தீவில் இருந்த மக்கள் தலைவன், ஒரு குறிப்பிட்ட நாளில் மக்கள் அனைவரையும் அழைத்து, “நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக் காரணமாக இருக்கும் குருவானவருக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டான். மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “ஆமாம், கட்டாயம் பரிசளிக்கவேண்டும்” என்றார்கள்.
உடனே மக்கள் தலைவன், மக்களில் இருந்த ஒருசில இளைஞர்களை அழைத்து, “நீங்கள் காட்டுக்குச் சென்று அபூர்வக் கிளி ஒன்றைப் பிடித்து வாருங்கள். அதனை நாம் குருவானவருக்குப் பரிசளிப்போம்” என்றான். இளைஞர்களும் அதற்குச் சரியென்று சொல்லி, காட்டுக்குச் சென்று நீண்ட நெடிய தேடலுக்குப் பின் ஓர் அபூர்வக் கிளியைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு குருவானவரிடம் சென்ற மக்கள் தலைவன், “சுவாமி! நீங்கள் எங்கள் நடுவில் ஆற்றிய அற்புதமான பணிக்கு நன்றியாக, இந்த அபூர்வக் கிளியை உங்களுக்குப் பரிசளிக்கின்றேன். இதை அருள்கூர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்த அபூர்வக் கிளிக்கு எந்த வாக்கியத்தை நீங்கள் முதலில் கற்றுத் தருகின்றீர்களோ, அதைத்தான் கடைசி வரைக்கும் சொல்லும்” என்றான். குருவானவரும் அதைச் சரியென்று கேட்டுக்கொண்டு அந்த அபூர்வக் கிளியை அன்போடு பெற்றுக்கொண்டார்.
இதற்குப் பின்பு குருவானார் அந்த ஆபூர்வக் கிளியை தான் இருந்த குடிசையின் முன்பாக வைத்துவிட்டு, ‘செபமாலை சொல்லிவிட்டு அதற்குபிறகு இந்தக் கிளிக்கு நல்லதொரு வாக்கியத்தைச் சொல்லிக்கொடுப்போம்’ என்று நினைத்துக்கொண்டு, சற்றுத் தள்ளி முழந்தாள் படியிட்டு, ஜெபமாலை சொல்லத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் ஜெபமாலையைச் முடித்துக்கொண்டு, அபூர்வக் கிளியின் அருகில் சென்று, தான் நினைத்து வைத்திருந்த ஒரு நல்ல வாக்கியத்தை அதனிடம் சொல்லத் தொடங்கினார். அவர் அந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்பாகவே அபூர்வக் கிளி, “அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கியது. அவருக்கு ஆச்சரியம் தாங்கி முடியவில்லை. ‘செபமாலை சொல்லும்போது திரும்பத் திரும்பச் சொன்ன வாக்கியம்தான் கிளியின் நினைவில் பதிந்துவிட்டது போலும்…’ என்று நினைத்துக்கொண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. திடீரென்று ஒருநாள் குருவானவர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி, அப்படியே இறந்துபோனார். இவர் இறந்த அன்று, அவரோடு இருந்த அபூர்வக் கிளி, “அருள் நிறைந்த மரியே வாழ்க” என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டுமாகச் சொல்லி வருந்தியது. அக்காட்சியைப் பார்த்துவிட்டு அந்தத் தீவில் இருந்த மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
பின்னர் குருவானவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்;அவரோடு இருந்த அபூர்வக் கிளி ஏலத்திற்கு விடப்பட்டது. அதை அந்தத் தீவிற்கு தற்செயலாக வந்திருந்த, நாடு நாடாகச் சுற்றித் திரிந்துவந்த பிறமதத்தைச் ஒரு பயணி, பெரிய தொகை கொடுத்து வாங்கினான். பின்னர் அவன் அதற்கு ஏதாவது சொல்லித்தரலாம் என்று நினைத்தபோது, அது “அருள் நிறைந்த மரியே வாழ்க” என்ற வாக்கியத்தைச் சொன்னதும் அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான். அதற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள எவ்வளவோ அவன் முயற்சி செய்தான். முடிவில் அவன் அயர்லாந்திற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒரு கோயிலில், அபூர்வக் கிளி சொல்லிவந்த அதே வார்த்தைகள் சொல்லப்படுவதைக் கேட்டு, அங்கிருந்த குருவானவரிடம் அதற்கான அர்த்ததைக் கேட்டான். அவர் அதற்கான அர்த்தத்தை விளக்கிச் சொன்னபோது, அதனால் தொடப்பட்டு, அவன் கிறிஸ்தவனாக மாறினான்.
‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்பது சாதாரண வாக்கியம் கிடையாது. அது வல்லமையுள்ள வாக்கியம்; ஆண்டவரே தன் தூதர் வழியாக மரியாவிடம் சொன்ன வாக்கியம். அந்த வாக்கியத்தை வானதூதர் கபிரியேல் மரியாவிடம் சொல்வதாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உமது சொற்படியே நிகழட்டும் என்று இறைத்திருவுளத்திற்கு பணிந்த மரியா
நற்செய்தியில் வானதூதர் கபிரியேல் மரியாவிடம், “அருள் நிறைந்தவரே வாழ்க…” என்கின்றார். எப்பொழுதும் நல்ல செய்தியோடு வருகின்ற வானதூதர் கபிரியேல் (தானி 8: 15-17, 9:21; லூக் 1: 5-25) மரியாவிடம் வருகின்றபோதும் நல்ல செய்தியோடே வருகின்றார். அவர் மரியாவிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மரியா, ‘இந்த வாழ்த்து எத்தகையதோ’ என்று எண்ணினாலும், வானதூதர் எல்லாவற்றையும் விளக்கிய பின்பு, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று இறைவனின் திருவுளம் நிறைவேற்றத் தன்னையே கையளிக்கின்றார்.
இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி, மரியா மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்வதற்கு அவரிடம் நிறைய துணிச்சல் இருந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், யோசேப்போடு கூடி வாழ்வதற்கு முன்பே அவர் கருவுற்றிக்கும் செய்தி மக்களுக்குத் தெரிந்தால், மக்கள் அவரைக் கல்லால் எறிந்துகொல்வார்கள் (இச 22: 13-21) என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படியிருந்தும் அவர் இறைவனின் திருவுளம் நிறைவேற எப்படிப்பட்ட சவாலையும் ஏற்கத் துணிகின்றார்.
மரியாவிடம் இருந்த இந்தத் துணிச்சல், கடவுளின் திருவுளம் நிறைவேற எதையும் ஏற்கத் துணிதல் போன்ற பண்புகள் நம்மிடம் இருக்கின்றதா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்’ (எபி 10:9) என்று சொன்ன இயேசுவைப் போன்று, அன்னை மரியாவைப் போன்று, நாமும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.