கிறிஸ்மஸ் குடில், ஒரு ‘வாழும் நற்செய்தி’
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தன் புதன் மறைக்கல்வி உரைகளில், ஆதிகாலக் கிறிஸ்தவர்களிடையே எவ்வாறு முதல் சீடர்களின் அயராத உழைப்பினால் கிறிஸ்தவம் பரவி வளர்ந்தது என்பது குறித்து ஒரு தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில், இவ்வாரம் புதனன்று, அப்பெருவிழாவுக்காக நம்மை எவ்வாறு தயாரித்து வருகிறோம் என்பது குறித்து மறைக்கல்வி உரையை வழங்கினார். முதலில், லூக்கா நற்செய்தியிலிருந்து,
வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (லூக்கா 2, 15-16), என்ற பகுதி வாசிக்கப்பட, அது குறித்து தன் கருத்துக்களை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதரர், சகோதரிகளே, திருவருகைக் காலத்தின் இந்த இறுதி நாட்களில், இயேசுவின் பிறப்பிற்காக நம்மை நாம் எவ்விதம் தயாரிக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் கேட்பது சிறப்பு. கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக நம்மைத் தயாரிக்கும் வழிகளில் ஒன்று, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்த அழகு நிறை பாரம்பரியத்தைப் பின்பற்றி, நம் வீடுகளிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும், இயேசு பிறப்பு குடிலை அமைப்பதாகும். கிறிஸ்மஸ் குடில் என்பது, ஒருவகையில் ‘வாழும் நற்செய்தியாகும்’. நம்மீது அன்பு கொண்டிருப்பதன் வெளிப்பாடாகவும், நம் தினசரி வாழ்வையும், நம் நம்பிக்கைகளையும் அக்கறையையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளவும், நம்மிடையே மனிதராக இறைவன் பிறந்தார் என்ற நெஞ்சைத் தொடும் உண்மையை நினைவுபடுத்தி நிற்கின்றன இந்த குடில்கள். ‘அப்பத்தின் வீடு’ என்று பொருள்படும் பெத்லகேமும், தீவனத்தொட்டியின் காட்சியும், நாம் ஒரே குடும்பமாக பகிர்ந்துண்ணும் உணவு குறித்தும், நம் குடும்ப வாழ்வில் மையமாக இருக்கும் இயேசு, வானகத்திலிருந்து உயிர்தரும் உணவாக இறங்கிவந்ததையும் நினைவூட்டி நிற்கின்றன. வெறித்தனமான நடவடிக்கைகளைக் கொண்டுள்ள இன்றைய உலகில், வாழ்வில் உண்மையிலேயே முக்கியமானது எது என்பது குறித்து, நின்று, நிதானித்து, சிந்திக்க இயேசு பிறப்பு குடில் நமக்கு ஊக்கமளிக்கிறது. நம் வாழ்வுக்கும், இவ்வுலகுக்கும் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே கொண்டுவரக்கூடிய அமைதி மற்றும் இணைக்க வாழ்வு குறித்து, நாம் கிறிஸ்து பிறப்பு குடிலில் காணும் அனைத்தும் எடுத்துரைக்கின்றன. இயேசு பிறந்துள்ள இந்த எளிமையான காட்சியை நாம் உற்றுநோக்கும் வேளையில், அவரை நாம் நம் இதயங்களுக்குள் அழைப்போம். அவ்வாறு, நாம் அழைப்பதன் வழியாக ஒவ்வொரு புதிய நாளும், நமக்கு ஆன்மீக மறுபிறப்பைக் கொணர்ந்து, கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை நமக்குள் தங்க வைக்கும்.
இப்புதன் மறைக்கல்வி உரையை இவ்வாறு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவரையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Comments are closed.