டிசம்பர் 16 : நற்செய்தி வாசகம்

வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். `இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர், பேறுபெற்றோர்

நிகழ்வு

அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றூரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. இத்தனைக்கும் அவர் ஒரு பாரம்பரியக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இருந்தாலும் அவர் ஆன்மிகத்திலும் கடவுள் தொடர்பானவற்றிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது, ஊரில் இருந்த எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

இதற்கு நடுவில் அந்தப் பெரியவரோடு நெருங்கிப் பழகி வந்த இளைஞன் ஒருவன் அவரிடம், “உங்களுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்களே! எப்பொழுதாவது நீங்கள் திருவிவிலியத்தை வாசித்திருக்கிறீர்களா…?” என்றான். அவர் இல்லையென்று சொன்னதும், அவன் அவரிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்து, “இந்தத் திருவிவிலியத்திலுள்ள யோவான் நற்செய்தியை வாசியுங்கள். அப்படி நீங்கள் வாசிக்கும் உங்களுக்கு எந்த இறைவார்த்தையில் நம்பிக்கை இல்லையோ, அந்த இறைவார்த்தையைச் சிவப்பு நிறத்தால் குறித்து வையுங்கள். அதன்பிறகு நான் உங்களுக்கு அது குறித்து விளக்கம் தருகின்றேன்” என்றான். பெரியவரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. இளைஞன் அந்தப் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகின்றபோதேல்லாம், “திருவிவிலியத்தை வாசிக்கின்றீர்களா…?” என்று கேட்பான். அவரும் வீட்டுக்குள் இருந்து ‘ம்ம்ம்’ என்று சத்தம் கொடுப்பார். ஒருநாள் அந்த இளைஞன் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகும்போது, வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டான். பெரியவரிடமிருந்து சத்தம் எதுவும் வராததால், வீட்டுக்குள் போய்ப் பார்த்தான். அங்கோ பெரியவர் இறந்து கிடந்தார்; அவருக்குப் பக்கத்தில் திருவிவிலியம் திறந்த நிலையில் இருந்தது.

உடனே அவன் திருவிவிலியத்தைக் கையில் எடுத்து, யோவான் நற்செய்திப் பகுதிக்கு வந்து, அங்கு ஏதாவது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கின்றதா? என்று பார்த்தான். முதல் அதிகாரத்தில் எதுவும் இல்லை; இரண்டாம் அதிகாரத்திலும் எதுவும் இல்லை. மூன்றாம் அதிகாரத்தின் பதினாறாவது இறைவார்த்தைக்குக் கீழ், “நம்பினோர்க்கு நிலைவாழ்வு தரும் பேரன்புமிக்க இறைவா! உன்மீது நான் ஆழமான நம்பிக்கை வைக்கின்றேன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் படித்துப்பார்த்த அவன் அப்படியே வியந்துநின்றான்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த பெரியவர், இறுதியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்டதும், அவரை ஏற்றுக்கொண்டதும் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. திருவருகைக்காலம் மூன்றும் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தையும் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழவேண்டும்; அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனைக் தருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாரா?

நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம், “வரவிருப்பவர் நீர்தாமா? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று தங்களுடைய தலைவர் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர்; அவரைத் தன்னுடைய சீடர்களிடம், ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று சுட்டிக்காட்டியவர் (யோவா 1:29) இந்தத் திருமுழுக்கு யோவான். அப்படிப்பட்டவர் தன் சீடர்கள் மூலம் மேலே உள்ளே கேள்வியைக் கேட்பது நமக்குச் சற்று வியப்பாக இருக்கின்றது. அவரை எது இப்படிக் கேட்க வைத்தது என்பதைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.

யோவான் இந்தக் கேள்வித் தன் சீடர்கள் மூலம் கேட்ட சமயத்தில், அவர் சிறையில் இருந்தார். ஒருவேளை அவர் ‘இறைப்பணியைச் செய்யும் தன்னை மெசியாவாகிய இயேசு விடுவிப்பார்’ என்று நினைத்து, அது நடக்காததால் இயேசு மெசியா இல்லையோ என்று எண்ணியிருக்கக்கூடும். மேலும் இயேசு பெரும்பாலும் பாவிகளோடு இருந்து, அவர்கள் நடுவில் பணிசெய்து வந்ததால், அவர் மெசியா இல்லைபோலும் என்று நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் தன்னுடைய நம்பிக்கையில் சிறிது தளர்ந்து, ‘வரவிருப்பவர் நீர்தாமா…? வேறொருவரை எதிர்பார்க்கவேண்டுமா…?’ என்ற கேள்வியைத் தன்னுடைய சீடர்கள் மூலம் இயேசுவிடம் கேட்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்குக் கூட, இயேசு உண்மையில் மெசியாதானா? என்ற ஐயம் இருந்தது; இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் திருமுழுக்கு யோவானைப் போன்று தன்னுடைய சீடர்களை நோன்பு இருக்கச் சொல்லவில்லை. இப்படியொரு நிலையில் இயேசு திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதையும், அதன் பொருள் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் மெசியா என்பதை வார்த்தையாலும் வாழ்வாழ்வாலும் எடுத்துச் சொன்ன இயேசு

திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு இயேசு, “ஆமாம், நான்தான் வரவிருப்பவர்” என்று நேரடியாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல், நீங்கள் கேட்பதையும் காண்பதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று கூறுகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலில் (எசா 26: 18-19, 42;7, 61:1), குறிப்பாக இன்றைய முதல் வாசகத்தில் (35: 5-6) மெசியாவின் வருகையின்போது, என்னென்ன நடக்கும் என்பன பற்றிச் சொல்லப்பட்டது. அவையெல்லாம் இயேசுவின் மூலம் நடந்தது. ஆமாம், இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளித்தார் (மத் 9: 27-31; கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தார் (மத் 9: 1-8); தொழுநோயாளரைக் குணமாக்கினார் (மத் 8: 1-4); பேச இயலாதவரைப் பேச வைத்தார் (மத் 9: 32-33); இறந்தோரை உயிர்பெற்று எழச் செய்தார் (மத் 9: 18-19); ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:23). இவ்வாறு அவர் தன்னுடைய போதனையாலும் வாழ்வாலும், தானே வரவிருப்பவர் என்பதை உறுதிப்படுத்தினார். இதைத் தான் இயேசு தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம், எடுத்துக்கூறி, திருமுழுக்கு யோவானிடம் சொல்லச் சொல்கின்றார். அவர் அவர்களிடம் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

நீங்கள் பேறுபெற்றோராக வேண்டுமா?

இயேசு, தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இறுதியாக, “என்னைத் தயக்கிமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு அவர்களிடம், என்னை, என்னுடைய வெளியடையாளங்கள், பழகுகின்ற மக்கள், பின்புலம் இவற்றைக் கொண்டு மதிப்பிடாமல் போதனையையும் செயல்களையும் பார்த்து தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.

சிறையில் அடைபட்டிருந்த திருமுழுக்கு யோவானுக்கு ஏற்பட்ட ‘இயேசுதான் வருவிருப்பவரா?’ என்ற ஐயம், பலருக்கும் ஏன், நமக்கும் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றபோதும் அல்லது துன்பங்களைச் சந்திக்கின்றபோதும் ஏற்படலாம். இதைவிடவும் இறைவனுடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் சூழ்நிலை நமக்கு ஏற்படலாம். ஆனால், எவர் ஒருவர் இயேசுவைத் தயக்கமின்றி, எந்தவொரு ஐயமின்றி ஏற்றுக்கொள்கின்றாரோ, அவரே பேறுபெற்றவர் ஆவார். ஆகையால், நாம் இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து பேறுபெற்றோர் ஆகப்போகிறோமா? அல்லது இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்து, அவர் தரும் ஆசியை இழக்கப்போகிறோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்’ (உரோ 10:9). என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர், இயேசுவே மெசியா என்று அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.