நற்செய்தி வாசக மறையுரை (டிசம்பர் 09)

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம்
திங்கட்கிழமை
லூக்கா 5: 17-26

கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?

நிகழ்வு

கடற்கரையோரத்தை ஒட்டிய ஒரு கிராமத்தில் மறைப்பணியைச் செய்துவந்த குருவானவர் ஒருவர், ஒருநாள் மாலை வேளையில் கடற்கரையோரமாய் நடந்துசென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது அவருக்கு எதிரில் வந்த இளைஞன் ஒருவன் குருவானவரைப் பார்த்து, “சுவாமி! என்னுடைய கைகளில் என்ன இருக்கின்றது என்று சொல்லமுடியுமா…?” என்றான். “மணல் இருப்பது போல் தெரிகிறது” என்றார் குருவானவர். உடனே அந்த இளைஞன், “சுவாமி! நீங்கள் சொல்வது சரி… எதற்கான நான் இந்த மணலை என்னுடைய கைகளில் வைத்திருக்கின்றேன் என்று சொல்ல முடியுமா…?” என்றான். “எனக்குத் தெரியவில்லை… நீயே சொல்லிவிடு” என்று குருவானவர் சொன்னதும், அவன், “சுவாமி! என் கைகளில் இருக்கின்ற இந்த மணல் அளவுக்கு நான் கணக்கில் அடங்காத பாவங்களைச் செய்திருக்கின்றேன்… என்னுடைய பாவங்களுக்கெல்லாம் இறைவனிடமிருந்து மன்னிப்புக் கிடைக்குமா…?” என்றான்.

அந்த இளைஞன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட குருவானவர் அவனிடம், “தம்பி! உன்னுடைய கைகளில் இருக்கும் இந்த மணலை வைத்து கடற்கரையில் வீடு கட்டு. அதன்பிறகு என்ன நடக்கின்றது என்பதை என்னிடம் வந்து சொல்” என்றார். அந்த இளைஞனும் குருவானவர் தன்னிடம் சொன்னது போன்று தன்னுடைய கைகளில் வைத்திருந்த மணலைக் கொண்டு கடற்கரையில் ஒரு வீடு கட்டி அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வேளையில் வேகமாக வந்த ஒரு பெரிய அலை அவன் கட்டியிருந்த மணல்வீட்டை அடித்துச் சென்றது.

இதற்குப் பின்பு அவன் குருவானவரிடம் வந்து நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னான். அதற்குக் குருவானவர் அவனிடம், “தம்பி! உன் பாவங்கள் கடற்கரை மணலைப் போன்று கணக்கில் அடங்காதவையாக இருந்தாலும், கடவுள் தன் பேரன்பால் அவை அனைத்தையும் மன்னித்துவிடுவார்” என்றார்.

ஆம், இறைவாக்கினர் எசாயா உரைப்பது போன்று, நம்முடைய பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும், (கடவுள் தன் பேரன்பால்) உறைந்த பனிபோன்று அவற்றை வெண்மையாக மாற்றிடுவார் (எசாயா 1:18). இன்றைய நற்செய்தி வாசகம், ஆண்டவர் இயேசு அளித்த பாவ மன்னிப்பின் மூலம் நலம் பெற்ற ஒருவரைக் குறித்துப் பேசுகின்றது. அது பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முடக்குவாதமுற்றவருக்கு நலமளித்த இயேசு

நற்செய்தியில் இயேசு தன்னுடைய வீட்டிலிருந்து போதித்துக்கொண்டிருக்கும்போது, கூரையைப் பிய்த்து இறக்கப்படும் முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார். ஆனால், அவர் அந்த மனிதரை நலப்படுக்கின்ற விதம் பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட ஆசிரியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்துகின்றது. அதற்கு முக்கியமானதொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், வழக்கமாக ஒருவரை நலப்படுகின்றபோது இயேசு அவரைத் தொட்டோ, ‘உன்னுடைய நம்பிக்கை உன்னை நலப்படுத்தியது’ என்று சொல்லியோதான் நலப்படுத்துவார். இன்றைய நற்செய்தியிலோ இயேசு முடக்குவாதமற்ற மனிதரிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லி, நலப்படுத்துகின்றார். இதனாலேயே பரிசேயர்கள், “பாவங்களை மன்னிக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?’ என்று எண்ணுகிறார்கள்.

யூதர்களைப் பொறுத்தளவில் கடவுள் இகழ்வது என்பது கொலைக் குற்றமாகும். இப்படிப்பட்ட தவற்றினைச் செய்கின்றவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் (லேவி 24: 16) என்பது மோசேயின் சட்டமாகும். இயேசு, முடக்குவாதமுற்றவருடைய பாவங்களை மன்னித்ததால், அவர் மிகப்பெரிய தவற்றினைச் செய்துவிட்டதாக எண்ணுகின்றார்கள் பரிசேயர்கள். உண்மையில் இயேசு யூதர்கள் நினைப்பது போன்று கடவுளை இகழ்ந்துவிட்டாரா? அல்லது பாவங்களை மன்னிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கின்றதா? என்பன குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு

மெசியா வருகின்றபோது, மக்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்பது பழைய ஏற்பாட்டில் ஆங்காங்கே சொல்லப்படும் செய்தியாகும் (எசா 40:2; மீகா 7: 18,19). இயேசுவும் கூட, “அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கின்றன” (மத் 28: 18) என்ற வார்த்தைகளில் இதை உறுதி செய்கின்றார். அப்படியானால், இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. அதனாலேயே அவர் முடக்குவாதமுற்றவரின் பாவங்களை மன்னித்து, அவரை நலம்பெறச் செய்கின்றார். இந்த உண்மையை உணராமல்தான் பரிசேயர்களும் திருச்சட்ட ஆசிரியர்களும் இயேசு, கடவுளை இகழ்ந்துவிட்டார் என அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்.

முடக்குவாதமுற்றவருக்கு நலமளித்த இந்த நிகழ்வைச் சிந்தித்துப் பார்க்கின்ற நமக்கு, இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து, நமக்குப் புதுவாழ்வு தருவார் என்பதில் நம்பிக்கை இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பார்த்து இவ்வாறு சொல்வார், “இவரே உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி.” (யோவா 1:29). ஆகையால், நம்முடைய பாவங்களை மன்னித்து, நமக்கு புதுவாழ்வு தருகின்ற இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

சிந்தனை

‘இயேசு வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு’ (திப 10 13: 38) என்கிறது இறைவார்த்தை. எனவே, நமக்கு பாவ மன்னிப்புத் தரும் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.