டிசம்பர் 8 : திருவருகைக்காலம் 02ஆம் வாரம் ஞாயிறு நற்செய்தி வாசகம்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-12

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். `ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

I எசாயா 1: 1-10

II உரோமையர் 15: 4-9

III மத்தேயு 3: 1-12

மனமாற்றத்தைச் செயலில் காட்டுங்கள்

நிகழ்வு

1895 ஆம் ஆண்டில் ஒருநாள், அமெரிக்க அதிபராக இருந்த கிளீவ்லாண்ட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

“மாண்புமிகு அதிபர் அவர்களே! வணக்கம். உங்கள் குடிமக்களில் ஒருவனாகிய நான் எழுதிக்கொள்வது…. சிலநாள்களாகவே எனக்கு நிம்மதியில்லை. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக நான் செய்த தவறுதான் என்னுடைய நினைவுக்கு வந்துபோகின்றது. நான் செய்த தவறு இதுதான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூன்று தபால்தலைகளை நான் மீண்டுமாகப் பயன்படுத்திவிட்டேன். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். ஏதோ அறியாமல் செய்துவிட்டான். இப்பொழுது நான் அதற்காக மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், தவறாகப் பயன்படுத்திய அந்த மூன்று தபால்தலைகளுக்கு உண்டான பணத்தைக் காசோலையாக இந்தக் கடிதத்தோடு இணைத்துள்ளேன். அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்களில் குடிமக்களில் ஒருவன்.”

இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்த்த அதிபர் கிளீவ்லாண்ட் அப்படியே வியந்துபோய் நின்றார். ‘செய்த தவறினை உணர்ந்து, அதற்குப் பரிகாரம் தேடிய இந்தச் சிறுவன் அல்லவா நாட்டின் உண்மையான குடிமகன்’ என்று அவர் அவனுடைய கடிதத்தை வெள்ளை மாளிகையில் பத்திரப்படுத்தி வைத்தார். அது இன்றைக்கும் அங்கு உள்ளது.

உண்மையான மனமாற்றம் தவறுக்காக மனம்வருந்துவது மட்டுமல்ல, செய்த தவறை இனிமேலும் செய்வதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டு, நேர்வழியில் நடப்பது. இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை மெசியாவின் வருகைக்காக நாம் நம்மையே தயாரிக்கும் விதமாக மனம்மாறி நல்வழியில் நடக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படி மனம்மாறி நல்வழியில் நடப்பது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

திருவருகைக்காலத்தின் கதாநாயகன் திருமுழுக்கு யோவான்

நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகையின் பொருட்டு மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவருடைய இந்த அழைப்பினை ஏற்று வரிதண்டுபவர்களும் பாவிகளும் அவரிடம் செல்கின்றார்கள், பரிசேயர்களும் சதுசேயர்களும் ‘தாங்கள் நேர்மையாளர்கள்… அதனால் தாங்கள் மனமாறத் தேவையில்லை’ என்று அப்படியே இருக்கின்றார்கள்.

இந்தத் திருமுழுக்கு யோவான் யார்? எந்த அதிகாரத்தால் அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்? அவருடைய அழைப்பிற்குச் செவிமடுப்பதன் தேவை என்ன? என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவர் (லூக் 1: 16-17), இயேசுவின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவர் எலியா (மத் 17:12). மட்டுமல்லாமல் அவர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 7: 11). இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் கடைசி இறைவாக்கினர் (லூக் 16:16). இத்தகைய சிறப்புகளைப் பெற்ற திருமுழுக்கு யோவான் தன்னுடைய சொந்த அதிகாரத்தால் போதிக்கவில்லை, திருமுழுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, விண்ணகத்திலிருந்து வந்த அதிகாரத்தாலேயே போதித்தார், திருமுழுக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவருடைய போதனை எல்லாரும் கேட்டு மனம்மாறியிருக்கவேண்டும். ஆனால், மேலே நாம் பார்த்ததுபோல வரிதண்டுபவர்களும் பாவிகளும்தான் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறினார்கள். ஏனையோர் மனம்மாறத் தேவையே இல்லை என்பதுபோல் இருந்தார்கள். அதனால் அதற்குரிய தண்டனைக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டார்கள்.

Comments are closed.