இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.
இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
நம்புகிறீர்களா?
போக்குவரத்து வசதி அதிகமில்லாத காலத்தில் மேலை நாடுகளில் மறைப்பரப்புப் பணியினைச் செய்துவந்த குருக்கள் குதிரையில்தான் சவாரி செய்து நற்செய்தி அறிவித்து வந்தார்கள். அப்படிக் குதிரையில் சென்று நற்செய்தி அறிவிக்கின்றபோது இடையிடையே ஆறு வரும். சில சமயங்களில் அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு வேறு ஏற்படும். இப்படிப்பட்ட சமயங்களில் அந்தக் குருக்கள் வித்தியாசமான ஓர் அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். அவர்கள் பின்பற்றிய அந்த வித்தியாசமான அணுகுமுறை இதுதான்:
குதிரையின் மூலம் அந்தக் குருக்கள் ஒருகரையிலிருந்து மறுகரைக்குச் செல்லும்போது நீரின் வேகத்தையோ, அதன் சுழற்றியையோ பார்க்க மாட்டார்கள். மாறாக, மறுகரையில் இருக்கின்ற மரத்தையோ, குன்றுகளையோ, வேறு ஏதோ ஒன்றைத்தான் பார்ப்பார்கள். அதற்கு முக்கியமான காரணம், எப்பொழுதெல்லாம் அவர்கள் நீரின் வேகத்தையும் சுழற்றியையும் பார்க்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் தலைசுற்றி ஆற்றுக்குள் விழுந்து இறந்துபோனார்கள். ஆனால், அவர்கள் மறுகரையில் உள்ள மரத்தின்மீதோ, குன்றின்மீதோ தங்களுடைய கண்களைப் பதிய வைத்துப் பயணம் செய்தபோது, எந்தவோர் ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக மறுகரையை அடைந்தார்கள்.
இந்த வரலாற்றுச் செய்தி நமக்கொரு முக்கியமான உண்மையை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், எப்படி குதிரையில் பயணம் செய்து நற்செய்தி அறிவித்து வந்த குருக்கள் மறுகரையில் இருந்த மரத்தின்மீதும் குன்றின்மீதும் கண்களைப் பதிய வைத்துப் பத்திரமாக மறுகரையை அடைந்தார்களே அப்படி, நாமும் ஆண்டவர்மீது நம்முடைய கண்களைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தோமெனில் அவருடைய ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.
இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டதால், நலம்பெற இருவரைக் குறித்துப் பேசுகின்றது. அவர்கள் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கை எத்தகையது? அதனால் அவர்கள் பெற்ற ஆசி எத்தகையது? என்பன குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பினால் நலம்
இயேசு தன் சொந்த ஊரைவிட்டு வெளியே செல்கின்றார். அப்பொழுது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்ட அவரைப் பின்தொடர்கின்றார்கள். இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, இயேசு அவர்களுக்கு உடனடியாக நலமளித்துவிடவில்லை என்பதுதான். மாறாக, அவர்களுடைய நம்பிக்கை எத்துணை உறுதியானது, ஆழமானது என்பதைச் சோதித்தறிகின்றார். ஆம், இயேசு தன்னால் கத்திக்கொண்டே வந்தவர்களுக்கு உடனடியாக நலமளிக்காமல், தன்னுடைய வீட்டிற்கு வந்தபின்தான், நம்பிக்கையைச் சோதித்தறிந்த பின்பு, அவர்களுக்கு நலமளிக்கின்றார்.
இயேசு பார்வையற்ற இந்த இரண்டு மனிதர்களையும் நலப்படுத்திய நிகழ்வு நமக்குச் சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, நாம் நம்முடைய நம்பிக்கையில் ஒருபோதும் தளர்ந்துபோகக்கூடாது என்பதாகும். சில சமயங்களில் நாம் இறைவனிடம் ஒரு தேவைக்காக ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ மன்றாடிவிட்டு, அது உடனடியாகக் கிடைக்கவில்லை என்றதும், மனம்தளர்ந்து போய்விடுகின்றோம். ஆனால், நாம் நம்முடைய வாழ்க்கையில் மனம்தளர்ந்து போகக்கூடாது; இறைவன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கவேண்டும் என்பதைத்தான் இந்த இரண்டு பார்வையற்ற மனிதர்களும் நமக்கு எடுத்துரைக்கின்றார்கள். ஆகையால், நாம் நம்முடைய நம்பிக்கையில் எப்பொழுதும் உறுதியாக இருக்கவேண்டும்.
மெசியா வந்துவிட்டார்
இயேசு பார்வையற்ற இருவரை நலப்படுத்திய நிகழ்வு, நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது செய்தி, மெசியா இவ்வுலகிற்கு வந்துவிட்டார் என்பதாகும் .எவ்வாறெனில், இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் வருகையின்போது (எசா 29: 18, 35: 5-6, 42:7) பார்வையற்றவர் பார்வை பெறுவர் என்று முன்னறிவித்தார். அது இயேசுவின் வழியாக நிறைவேறியது (லூக் 4:21) இவ்வாறு இயேசு பார்வையற்ற மனிதர்களுக்கு பார்வையளித்ததன்மூலம் மெசியா இப்பூவுலகிற்கு வந்துவிட்டார் என்பது உண்மையாகின்றது.
Comments are closed.