டிசம்பர் 1 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்
விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும்.
வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.
அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப் படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“ஆண்டவர் வருகின்றார்… அணியமாய் இருங்கள்”
முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவரிடத்தில் விகடகவி ஒருவர் இருந்தார். அந்த விகடகவி அரசருக்கு நெருங்கிய நண்பராக வேறு இருந்தார். இரண்டுபேரும் பலவற்றைக் குறித்துப் பேசி மகிழ்வார்கள், கலந்துரையாடுவார்கள். இப்படியிருக்கையில் ஒருநாள் விகடகவி ஒரு முட்டாள்தனமான ஒரு செய்தியை அரசரிடம் சொன்னார். அதைக் கேட்டு அரசருக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “இப்படியொரு முட்டாள்தனமான செய்தியை என் வாழ்நாளில் இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை… உண்மையில் நீர் பெரிய முட்டாள்” என்று சொல்லி, அரசர் விகடகவியிடம் ஒரு கோலைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “உம்மைவிடப் பெரிய முட்டாளை எப்பொழுது நீர் பார்க்கின்றீரோ, அப்பொழுது அவரிடம் இந்தக் கோலைக் கொடுத்துவிடும்.” இப்படிச் சொல்லிவிட்டு அரசர் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
இதற்குப் பின்பு விகடகவி தன்னைவிடப் பெரிய முட்டாளைத் தேடித் பார்க்கத் தொடங்கினார். நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானதே ஒழிய, அவரால் தன்னைவிடப் பெரிய முட்டாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அரசருக்கு வயதாகிக்கொண்டே போனது. ஒருநாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் நீண்ட நாள்களுக்கு உயிர்வாழமாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அரசர் அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களை அழைத்து, அவர்களிடம் இறுதியாக ஒருசில வார்த்தைகளைப் பேச விரும்பினார். இதைத் தொடர்ந்து செய்தி அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களுக்குச் சொல்லப்பட்டு, அவர்கள் அனைவரும் அரசருக்கு முன்பாக வந்து கூடினார்கள். அவர்களோடு விகடகவியும் அங்கு வந்து நின்றார்.
அப்பொழுது அரசர் அவர்களிடம், “அன்பார்ந்தவர்களே! நானொரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் போகிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் நான் உங்களைப் பார்ப்பானே என்றுகூட எனக்குத் தெரியாது. அதனால்தான் உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று உங்களைக் கூப்பிட்டேன்” என்றார். இதைக் கேட்டு எல்லாரும் கண்ணீர் வடித்து அழுதார்கள். பின்னர் விகடகவி அரசரிடம், “அரசே! உங்களிடம் ஒருசில வாத்தைகள் பேசவேண்டும்… வழக்கமாக நீங்கள் எந்தவொரு நாட்டிற்குப் பயணம் செய்தாலும் உங்களுடைய தூதரை அந்நாட்டு அரசரிடம் அனுப்பி, தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வீர்கள்தானே…! இப்பொழுது நீங்கள் சந்திக்கப்போவதோ அரசருக்கெல்லாம் அரசர்! அவரோடு தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டீர்களா…? அவரைச் சந்திப்பதற்கு நீங்கள் அணியமாகிவிட்டீர்களா…?” என்றார். அரசருடைய முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது. உடனே விகடகவி அவரிடம், “அரசருக்கெல்லாம் அரசரைச் சந்திக்கப்போகும்போது எந்தவோர் ஏற்பாடும் செய்யாமல் போகும் நீங்கள்தான் மிகப்பெரிய முட்டாள். இதோ இந்தக் கோலைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார். அரசர் அப்படியே அதிர்ந்து போனார்.
இந்த நிகழ்வில் வருகின்ற, அரசருக்கெல்லாம் அரசரான ஆண்டவரைச் சந்திக்க அணியமில்லாமல் (ஆயத்தமாக இல்லாமல்) இருக்கும் அரசரைப் போன்றுதான் பலரும் ஆண்டவரைச் சந்திப்பதற்கு அணியமில்லாமல் இருக்கின்றார்கள். இந்நிலையில், இன்றைய இறைவார்த்தை ஆண்டவரின் வருகைக்காக அணியமாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி அணியமாக இருப்பது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரை மறந்து, உலக வாழ்க்கையில் மூழ்கிப்போகும் மக்கள்
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில், இயேசு மானிடமகனுடைய வருகையின்போது என்னென்ன நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அதற்காக அவர் கையில் எடுக்கும் அடையாளம் அல்லது எடுத்துக்காட்டுதான் நோவா. நோவாவின் காலத்தில் மக்கள் உண்டும் குடித்தும் தீமையில் வீழ்ந்தும் கிடந்தார்கள் (தொநூ 6:5). நோவாவோ வரப்போகின்ற கேட்டினைக் குறித்து மக்களிடம் எடுத்துச் சொன்னார் (2 பேது 2:5). அப்படியிருந்தும் மக்கள் அவருடைய குரலைக் கேளாமல், தீமையில் வீழ்ந்துகிடந்ததால், வெள்ளப்பெருக்கினால் அழிந்துபோனார்கள்.
Comments are closed.