சுதந்திரமான, எளிமையான முன்னோக்கிச் செல்லும்
இக்காலத்தில் சுதந்திரமான மற்றும், எளிமையான முன்னோக்கிச் செல்லும் திருஅவை நமக்குத் தேவை என்று, நற்செய்தியின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தியின் மகிழ்வு மடல் வெளியிடப்பட்டதன் ஆறாம் ஆண்டை முன்னிட்டு, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட, ஏறத்தாழ ஆயிரம் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வு, இயேசுவைச் சந்திப்பதில் மலர்கின்றது என்பதை மிக எளிமையாகச் சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார்.
நன்மை, வசதிவாய்ப்பு மற்றும், எளிதாக நுழைதல் பற்றி நினைக்காத, சுதந்திரமான, எளிமையான முன்னோக்கிச் செல்லும் திருஅவை நமக்கு அவசியம் என்றும், நற்செய்தியை அறிவிக்க வேண்டிய தேவை, தன்னார்வத்துடன் எழுவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஆண்டவரை சந்திக்கையில், அன்பு வெள்ளத்தால் நாம் நிரப்பப்படுகிறோம், அப்போது நற்செய்தியை அறிவிப்பதற்கு தானாக ஆவல் எழுகின்றது, இவ்வாறு நற்செய்தி அறிவிப்பு, உயிர்ப்பு ஞாயிறன்று துவங்கியது என்றும் திருத்தந்தை கூறினார்.
இக்காலத்தில் பலரது அனுபவம், மரிய மதலேனாள் அனுபவம் போன்றே உள்ளது, இப்புனிதர் போன்று, எல்லையில்லா மற்றும், உண்மையான அன்புக்காக, கடவுள்மீது கொண்டிருக்கும் தாகம், எல்லா மனிதரின் இதயங்களில் வேரூன்றப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
இவ்வாறு வாழ்வதற்கு, ஒவ்வொருவருக்கும் அன்பின் கடவுள் தேவை, அந்த அன்பு நம் இதயங்களில் தொடர்ந்து இருந்தால், நுகர்வுக் கலாச்சாரத்தில், நாம் புறக்கணிப்பை மூச்சுவிடமாட்டோம் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பவர்கள், எப்போதும் சாலையில் பிறரைத் தேடுபவர்கள் என்பதை மறக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கடவுளின் அருள், பலவீனத்தில் தன்னை வெளிப்படுத்த விரும்புகிறது என்பதால், ஏழ்மைநிலைகள், நற்செய்தியை அறிவிப்பதற்குத் தடைகள் அல்ல என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் விசுவாசத்திற்காகச் சித்ரவதை செய்யப்பட்ட மற்றும், எல்லாரும் எதிர்த்த முதல் கிறிஸ்தவர்கள், நம் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை, “நற்செய்தியின் மகிழ்வு: வரவேற்பும், கூறுகளும். முன்னோக்கிச் செல்லும் திருஅவை” என்ற தலைப்பில் கடந்த மூன்று நாள்களாக, வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில், உலகின் பல நாடுகளிலிருந்து ஆயர்கள், துறவியர் மற்றும், பொதுநிலையினர் கலந்துகொண்டனர்.
Comments are closed.