நவம்பர் 12 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்

நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?

மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

கடமையைச் செய்வோம்; கடமைக்காக எதையும் செய்யாதிருப்போம்

ஒருமுறை இங்கிலாந்து நாட்டில் போக்குவரத்து அதிகமாக இருந்த ஒரு சாலையோரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயச் சொற்பொழிவுக் கூட்டத்தில், குருவானவர் ஒருவர் நின்றுகொண்டு சமய உரையை ஆற்றிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாகத் தன்னுடைய நான்கு சக்கர வண்டியில் வேகமாக வந்த முரடன் ஒருவன் வண்டியை நிறுத்துவிட்டு குருவானவரை நோக்கி, “நீர் செய்யும் இந்தப் பணிக்குக் கடவுள் உமக்கு எந்தவொரு கைம்மாறும் தரமாட்டார்” என்று கத்தினான். அதற்குக் குருவானவர் அவனிடம், “கைம்மாறு கருதி நான் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கவில்லை; ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்பது என்னுடைய கடமை. அந்தக் கடமையை நான் செய்துகொண்டிருக்கின்றேன். கைம்மாறு தருவதும் தராததும் அவருடைய கையில் இருக்கின்றது” என்றார். இதைக் கேட்டுவிட்டு அந்த முரடன் வந்த வழியில் திரும்பிச் சென்றுவிட்டான்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்பினை எந்தவொரு கைம்மாறையும் எதிர்பாராமல், கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு கைம்மாறு கருதாமல், நம்முடைய கடமையை ஆற்றவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அதுகுறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கைம்மாறு கருதியே எதையும் செய்யும் உலகம்

நாம் வாழும் இந்த உலகில், மக்கள் எதைச் செய்தாலும் அதில் பலன் இருக்கின்றதா? இலாபம் கிடைக்குமா? கைம்மாறு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்போடு செய்வதைக் காணமுடிகின்றது. நடைமுறை வாழ்க்கையில் இப்படி எதிர்பார்ப்போடு அல்லது கைம்மாறு கருதி ஒன்றைச் செய்கின்ற எண்ணம் இருந்தாலும், ஆன்மீக வாழ்க்கையில் அதிலும் குறிப்பாக நற்செய்திப் பணியில் இத்தகைய எண்ணம் இருக்கக்கூடாது என்பதை இயேசு மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். அதற்காக அவர் கூறுகின்ற உவமைதான் பயனற்ற பணியாளர் உவமையாகும்.

இயேசு சொல்லும் இவ்வுமையில் வருகின்ற பணியாளர் வயலை உழுபவராகவும் மந்தையை மேய்ப்பவராகவும் இருக்கின்றார். இரண்டு பணிகளுமே நற்செய்திப் பணியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. எப்படியென்றால், உழவர் எவ்வாறு நிலத்தை உழுது விதையை விதைக்கின்றாரோ அவ்வாறு நற்செய்திப் பணியைச் செய்கின்றவர் மனிதர்களுடைய உள்ளம் என்னும் நிலத்தை உழுது, இறைவார்த்தை என்னும் விதையை அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கின்றார்; மந்தையை மேய்கின்றவர் எவ்வாறு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடு மாடுகளை நல்லமுறையில் மேய்கின்றாரோ, அவ்வாறு நற்செய்திப் பணியாளரும் இறைமக்கள் சமூகம் என்ற மந்தையை நல்லமுறையில் பராமரிக்கின்றார். அப்படியானால், இயேசு சொல்லும் இந்தப் பயனற்றப் பணியாளர் உவமையில் வருகின்ற பணியாளர் வேறு யாருமல்ல, இயேசுவின் பணியைச் செய்யக்கூடியவர்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மேலும் உவமையில் வருகின்ற பணியாளர் வயலை உழுததற்காகவும் மந்தையை மேய்த்ததற்காகவும் தலைவர் அவரைப் பாராட்டவில்லை. மாறாக, அவர்க்கு மேலும் பணிகளைத் தருகின்றார். இதன்மூலம் இயேசு தன்னுடைய சீடர்கட்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி: பலனையோ, பாராட்டையோ, கைம்மாறையோ எதிர்பாராமல் செய்யாமல், கடமையுணர்வோடு பணிவிடை செய்யவேண்டும் என்பதாகும்.

உள்ளார்ந்த அன்போடு பணிவிடை செய்யவேண்டும்

இயேசு சொல்லும் இந்தப் பயனற்ற பணியாளர் உவமை நமக்கு உணர்த்தும் இன்னொரு முக்கியமான செய்தி, இயேசுவின் சீடர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை ‘கடமைக்காக அல்ல, உள்ளார்ந்த அன்போடு செய்யவேண்டும்’ என்பதாகும்.

இன்றைக்குப் பலர் தங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஏதோ கடமைக்காக செய்வதைக் காணமுடிகின்றது. சீடத்துவ வாழ்வில் இத்தகைய ‘கடமைக்காகப் பணிசெய்கின்ற எண்ணம்’ முற்றிலுமாகத் தவிக்கப்படவேண்டும். புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “கிறிஸ்துவின் பணியாளாராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்.” (எபே 6:6) ஆம், இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒவ்வொருவரும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை அது நற்செய்திப் பணியாக இருக்கலாம்; ஆற்றுப்படுத்தும் பணியாக இருக்கலாம். வேறு எந்தப் பணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பணியை அவர் கடமைக்காக அல்லாமல், உளமார நிறைவேற்றவேண்டும். அப்பொழுது அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியும். இதை இயேசு, என்னை அன்புசெய்பவர் என்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்’ (யோவா 14:15) என்ற வார்த்தைகளில் இன்னும் அழகாகக் கூறுவார்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கைம்மாறு கருதாமல், கடமைக்காகச் செய்யாமல் உள்ளார்ந்த அன்போடு செய்ய முயற்சி செய்வோம்.

சிந்தனை.

‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பது மிகப் பிரபலமான ஒரு பொன்மொழி. நாம் இவ்வாக்கிற்கு ஏற்ப, பலனை எதிர்பாராமல், நம்முடைய கடமையைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.