அமைதியுடன் கூடிய உறவை வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள்
உலகில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் பாலங்களை கட்டியெழுப்புவதாகவும், தடுப்புச் சுவர்களை உடைத்தெறிவதாகவும், அமைதியுடன் கூடிய உறவை வளர்ப்பதாகவும் இருக்கட்டும் என ஜூலை 26 வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோடை ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளின் உண்மை உணர்வானது, போர் எனும் துயரநிலைக்கு எதிரான முறிவு மருந்தாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வழியாகவும் உள்ளது என தன் டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலங்களைக் கட்டவும், தடுப்புச் சுவர்களை அகற்றவும், அமைதியான உறவுகளை ஊக்குவிக்கவும் விளயாட்டுக்கள் உதவட்டும் என மேலும் கூறியுள்ளார்.
இவ்வெள்ளிக்கிழமையன்று, அதாவது ஜூலை 26 அன்று பிரான்சின் பாரிசில் துவங்கிய கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இடம்பெறும். இதனைத் தொடர்ந்து பாரிசில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்க உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவுறும். இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 22 விதமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 4400 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Comments are closed.