டிசம்பர் 30 : நற்செய்தி வாசகம்
எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அன்னா குழந்தையைப்பற்றிப் பேசினார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
“உலகின்மீது அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது”
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை வியாழக்கிழமை
I 1 யோவான் 2: 12-17
II லூக்கா 2: 36-40
“உலகின்மீது அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது”
திருடனுக்கு அஞ்சி மூன்று தாழ்ப்பாள்கள்:
தனது பால்ய கால நண்பர் ஒருவர் பக்கத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கின்றார் என்று கேள்விப்பட்ட பெரியவர் ஒருவர், அவரைப் பார்ப்பதற்காகப் பழங்களை வாங்கிக்கொண்டு, அவர் இருந்த வீட்டிற்கு முன்பு நின்றுகொண்டு, கதவைத் தட்டினார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, உள்ளே இருந்தவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அவர் கதவைத் திறக்கும்போது மூன்று விதமான சத்தங்கள் ஒலிப்பதைக் கேட்டு வியந்துபோய், வந்தவர் இது குறித்து அவரிடம் கேட்டார்.
“நான் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால், இரண்டு முறை திருட்டு நடந்துவிட்டது. அதனால்தான் மூன்று தாழ்பாள்கள் போட்டுக் கதவைப் பூட்டி வைத்திருக்கின்றேன்” என்றார் வீட்டில் இருந்தவர். இதைக் கேட்டதும் வந்தவர் சற்று அதிர்ந்துதான் போனார்.
ஆம், நம்மிடமுள்ள பணம், பொருள்கள், உடைமைகள் திருடுபோய்விடக்கூடாது என்பதற்காக நாம் எவ்வளவோ முயற்சி செய்கின்றோம். ஆனாலும் சில நேரங்களில் நாம் அவற்றை இழந்துவிட்டு மனம் உடைந்து போகின்றோம். இப்படி நாம் மனம் உடைந்து போவதற்குப் பொருள்கள்மீதான நமது பற்றுதான் காரணம் என்று சொல்லலாம். இன்றைய முதல் வாசகம், உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்துவோரிடம் தந்தையின் பால் அன்பு இராது என்கிறது.அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவர்மீது அன்பு கொள்வதுதான் முதன்மையான கட்டளை (இச 6:5). ஆனால், பலர் ஆண்டவர்மீது அன்பு கொள்வதற்குப் பதில் பணத்தின்மீதும் பொருளின்மீதும் அன்பு கொள்வதுண்டு. இப்படி ஆண்டவர்மீது அன்பு கொள்வதற்குப் பதில், பணத்தின்மீதும், பொருளின்மீதும் அன்பு கொள்வோருக்குத் தந்தையின்பால் அன்பு இராது என்கிற செய்தியை யோவான் இன்றைய முதல் வாசகத்தில் கூறுகின்றார்.
இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவர்மீது அன்புகொண்ட ஒருவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அவர்தான் அன்னா என்ற இறைவாக்கினர். பழைய ஏற்பாடு மிரியாம் (விப 15:20) குல்தா (2 அர 22:14) தெபோரா (நீத 4:4) ஆகிய பெண் இறைவாக்கினர்களைப் பற்றிக் கூறுகின்றது. இறைவாக்கினர் எசாயாவின் மனைவிகூட பெண் இறைவாக்கினர் என்றே அழைக்கப்படுகின்றார் (எசா 8:3). ஆனால், புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் ஒரே பெண் இறைவாக்கினர் இந்த அன்னாதான். இவர் தன் கணவரை இழந்ததும், கடவுளைச் சபித்துக் கொண்டிருக்காமல், எருசலேம் திருக்கோயிலுக்கு வந்து, அங்கேயே தங்கி, இறை வேண்டலிலும் நோன்பிலும் நிலைத்திருகின்றார். இதனால் இவர் குழந்தை இயேசுவைக் காணும் பேறு பெறுகின்றார்.
ஆதலால், நாம் உலக செல்வத்தின்மீது அல்ல, ஆண்டவர்மீது அன்பு கொண்டிருக்கும்போது, அன்னாவைப் போன்று ஆண்டவரைக் காணும் பேறுபெறுவோம் என்பது நிச்சயம்.
இறைவாக்கு:
பொருள் ஆசையே எல்லாத் தீமைக்கும் ஆணிவேர்.
பணம் பாதாளம் வரை செல்லலாம். அதற்காகப் பணத்தின்மீது பற்றுக்கொண்டிருப்போர் விண்ணகம் சென்றுவிட முடியாது.
செல்வம் சேர்க்க விரும்புவோர் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கின்றனர்.
சிந்தனைக்கு:
‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்க்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்’ (மத் 6:33) என்பார் இயேசு. எனவே, நாம் ஆண்டவர்மீது பற்றும் அன்பும் கொண்டவர்களாய், அவருக்கு ஏற்புடையவற்றை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.