#வாசக மறையுரை (நவம்பர் 26)

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம்
வெள்ளிக்கிழமை
I தானியேல் 7: 2-14
II லூக்கா 21: 29-33
“அவரது அரசு அழிந்து போகாது”
மக்கள்மீது பரிவுகொண்ட மன்னர்:
முன்பொரு காலத்தில் மன்னர் ஒருவர் இருந்தார். இவர் அடிக்கடி ‘தொலைநாட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்லிகொண்டு எங்காவது கிளம்பி விடுவார். இவ்வாறு எங்காவது கிளம்பிச் சென்றுவிடும் இவர், சில நாள்களோ அல்லது சில மாதங்களோ கழித்து, அரண்மனைக்குத் திரும்பி வந்து மக்களை நல்லமுறையில் ஆட்சி செய்வார். இதனால் மக்கள் இவருடைய ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
உண்மையில், இவர் தொலைநாட்டிற்குப் போவதாகச் சொல்லிவிட்டு, எங்கேயும் செல்லமாட்டார்; தன் நாட்டிலேயேதான் இருப்பார். ஆனால், இவர் ஒரு சாதாரண விவசாயியைப் போன்று அல்லது ஒரு சாதாரண கூலித் தொழிலாளி போன்று மாறுவேடம் தரித்து, மக்கள் நடுவில் வலம்வருவார்; அவர்களுடைய துக்க துயரங்களை கேட்டறிந்துவிட்டு, அரண்மனைக்குத் திரும்பி வந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். இதனாலேயே மக்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
மேலே இடம்பெறும் நிகழ்வில் வரும் மன்னர் வேறு யாரும் அல்லர்; ஸ்காட்லாந்தை ஆண்ட நான்காம் ஜேம்ஸ் என்பவரே ஆவார். ஆண்டவராகிய இயேசுவும் மனுவுரு எடுத்து, நம் நடுவில் வாழ்ந்து, நம் துன்ப துயரங்களை அறிந்து, நமக்காகத் தன்னையே தந்தார். அதனால் அவருடைய அரசு என்றுமுள்ளதாக இருக்கின்றது. இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை அவரது ஆட்சியுரிமை என்றுமுள்ளது; அவரது அரசு அழிந்து போகாது என்கிற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் ஒரு காட்சி காண்கின்றார். அந்தக் காட்சியில் நான்கு விலங்குகள் தோன்றுகின்றன. இந்த நான்கு விலங்குகளும் முறையே பாபிலோனிய, மேதிய-பாரசீக, கிரேக்க, உரோமை ஆகிய நான்கு அரசுகளைக் குறிக்கின்றன. மிகவும் வலிமை வாய்ந்தவையாகக் கருத்தப்பட்ட இந்த நான்கு அரசுகளும் அழிக்கப்பட்டு, மெசியாவின் அரசு அல்லது இறையரசு நிறுவப்படுகின்றது. இறைவாக்கினர் தானியேல் காணும் இக்காட்சி இறையரசே என்றுமுள்ள அரசு என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது.
நற்செய்தியில் இயேசு, உலகில் தோன்றும் அழிவுகள், மாற்றங்கள் யாவும் இறையாட்சி நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் என்கிறார். இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை. ஒழியாதவை. அதனால் அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.
எனவே, நாம் அழிந்துபோகிறவற்றில் நம்பிக்கை வைக்காமல், அழியாமல் என்றும் இருக்கும் ஆட்சியை நமக்கு வழங்கும் இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடப்போம்.
சிந்தனைக்கு:
 இவ்வுலகில் தோன்றிய எந்த அரசும் நிலைத்திருக்கவில்லை; இறையரசைத் தவிர.
 இதுவும் கடந்து போகும் என்று வாழப் பழகிக் கொண்டால் துன்பங்கள் இல்லை.
 இறையரசு மண்ணில் மலர நாம் மன்றாடுவோம்.
இறைவாக்கு:
‘அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்’ (மத் 6:33) என்பார் இயேசு. எனவே, நாம் இறையரசை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.