காயமடைந்துள்ள மனித சமுதாயத்தைக் குணப்படுத்த செயல்திட்டம்
நம் பூமிக்கோளத்தில் வெளியேற்றப்படும் கார்பனை முற்றிலும் நிறுத்துவதற்கு, எவ்வளவு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவில் மேற்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பல்சமயத் தலைவர்களும், அறிவியலாளர்களும், உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
“நம்பிக்கையும் அறிவியலும்: COP26ஐ நோக்கி” என்ற தலைப்பில், அக்டோபர் 4, இத்திங்களன்று, வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்களும், அறிவியலாளர்களும் இக்கருத்தரங்கின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு சேர்ந்து கையெழுத்திட்ட ஏட்டில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் வெளியேற்றப்படும் கார்பன் அளவைக் குறைப்பதற்கு, அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வறிய நாடுகளின் இந்த முயற்சிக்கு நிதி உதவி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ள அவ்வேடு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இக்காலத்தில், நம் பொதுவான அழகிய இல்லமாகிய இப்பூமிக்கோளத்தை பல்வேறு பிரச்சனைகள் அச்சுறுத்துகின்றன என்று கூறியுள்ளது.
அறநெறிசார்ந்த கடமை
இப்பூமிக்கோளம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள், மதிப்பீடுகள், நன்னெறி, ஆன்மீகம் ஆகியவற்றோடு தொடர்புடையவை எனவும், இயற்கையின் பாதுகாவலர்கள் என்ற முறையில், பூமிக்கோளத்தைக் குணப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நமக்கு அறநெறிசார்ந்த கடமை உள்ளது எனவும் அவ்வேடு கூறுகிறது.
காலநிலை மாற்றம் என்பது, மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ள அவ்வேடு, வளர்ச்சிப் பாதையில் மாற்றங்களைக் கொணர, நம்பிக்கையும், துணிச்சலும் அவசியம் என்றுரைக்கும் அவ்வேடு, புவியில் வெளியேற்றப்படும் கார்பன் அளவு, பூஜ்யம் என்ற அளவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது.
மனமாற்றம்
புதுப்பிக்கப்படக்கூடிய மின்சக்திக்கு ஆதரவாகவும், நிலத்தைச் சீராகப் பயன்படுத்துவதற்கும், உணவு அமைப்புமுறைகளில் மாற்றம் கொணரவும் அரசுகளில் மனமாற்றம் அவசியம் எனவும், இவ்வாறு செயல்படுவதன் வழியாக, சுற்றுச்சூழல் நண்பர்களாகவும், உள்ளூர் கலாச்சாரங்களை மதிக்கின்றவர்களாகவும், நுகரவுத் தன்மை மற்றும், உற்பத்தி முறைகளை மாற்றுகின்றவர்களாகவும் மாறுவோம் எனவும் அவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.
இப்பூமியோடும், மற்ற மக்களோடும் நாம் மேற்கொள்ளும் தொடர்பு முறைகளில், நம் மரபுகளின் உறுப்பினர்கள் மத்தியில் மனமாற்றத்தைக் கொணரவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் அவ்வேடு, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை நாம் பயன்படுத்தத் தவறினால் வருங்காலத் தலைமுறைகள் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.
வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும், COP26 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த 26வது உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டை முன்னிட்டு, வத்திக்கானில் இத்திங்களன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், எகிப்தின் இஸ்லாமிய பெரியகுரு இமாம் அல் தாயிப், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, இங்கிலாந்தின் ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டீன் வெல்பி ஆகியோர் உட்பட, யூத, மற்றும், புத்தமதத் தலைவர்கள் என 22 பேர் பங்குபெற்றனர்.
இக்கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் உரையாற்றியபின்னர், கடந்த வாரத்தில் மிலான் நகரில் நடைபெற்ற Youth4 Climate பன்னாட்டு இளையோர் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஓர் இளம்பெண்ணும், பல்சமயத் தலைவர்களும் உரையாற்றினர்.
Comments are closed.