இறை இரக்க ஞாயிறு: Santo Spirito in Sassia ஆலயத்தில் திருப்பலி
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் Santo Spirito in Sassia ஆலயத்தில், திருப்பலி நிறைவேற்றுவார் என்று திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
உலகில் இறை இரக்க பக்தி பரவுவதற்கு முக்கிய காரணமான புனித பவுஸ்தீனா கோவால்ஸ்கா (Faustina Kowalska) அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டது மற்றும், இறை இரக்க ஞாயிறு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரில் இறை இரக்க பக்தி முயற்சி சிறப்பாக நடைபெறும் Santo Spirito in Sassia ஆலயத்தில் திருத்தந்தை, திருப்பலி நிறைவேற்றவுள்ளார்.
இறை இரக்க விழாவாகிய, வருகிற ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகளின் பங்கேற்பின்றி திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், அத்திருப்பலிக்குப்பின், அல்லேலூயா வாழ்த்தொலி உரையையும் வழங்குவார் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை நிறைவேற்றும் இத்திருப்பலி, வத்திக்கான் ஊடகத்தால் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், வத்திக்கான் செய்தித்துறை, இத்தாலியம், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், அராபியம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்திற்கு சிறிது தூரத்திலுள்ள Santo Spirito in Sassia ஆலயத்தில், 1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இறை இரக்கத் திருப்பலியை நிறைவேற்றினார். தற்போது 25 ஆண்டுகள் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றவுள்ளார்.
புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், போலந்து நாட்டின் Głogowiec எனும் ஊரில், வறிய, ஆனால், பக்தியுள்ள விவசாயக் குடும்பத்தில், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார். துறவு வாழ்வை மேற்கொண்ட இவர், இரக்கத்தின் அரசராகிய இயேசுவை, 1930ம் ஆண்டிலிருந்து, அவர் இறக்கும் வரை காட்சிகளில் கண்டார். இக்காட்சிகளில் இறை இரக்கத்தின் பக்தி குறித்து, இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினார். புனித பவுஸ்தீனா அவர்கள், 1938ம் ஆண்டு, தனது 33ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
Comments are closed.