ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கு இதுவல்ல காலம்
Covid-19 எனப்படும் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும், நாடுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, மனித சமுதாயத்தின் மீது, உலகளாவிய மனித உடன்பிறந்தநிலை காட்டப்படுவதற்கு இது ஏற்ற காலம் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.
மியான்மார் அரசு, கொரோனா தொற்றுக்கிருமி பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை முன்னிட்டு, தனது முகநூலில், பிப்ரவரி 25, இச்செவ்வாயன்று உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, யாங்கூன் பேராயரான கர்தினால் போ அவர்கள், நாம் எல்லாரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும், இல்லாவிடில் வீழ்ந்து விடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
மியான்மாரில், கொரோனா தொற்றுக்கிருமி பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், அது குறித்த பேச்சு சுதந்திரத்தை மியான்மார் அரசு வரையறுத்துள்ளது என்றும், ஒருவர் ஒருவரைக் குறை சொல்லிக்கொண்டிருப்பதற்கு இதுவல்ல காலம் என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இத்தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்டுள்ள நம் சகோதரர், சகோதரிகளை, நம் ஒவ்வொரு நாள் செபத்திலும் நினைவுகூர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தொற்றுக்கிருமியை மேலும் பரவவிடாமல் தடுப்பதற்கு, போர்க்கால நடவடிக்கை போன்று, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும், மனித வாழ்வை, சந்தைப் பொருளாதாரத்தில், விற்பனைப் பொருளாக மதிப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மியான்மார் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கிருமி குறித்து பேசுவதற்கு சமுதாய ஊடகம் உட்பட அனைத்து ஊடகங்களுக்கும், மியான்மார் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் கோவிட்-19 எனப்படும் இத்தொற்றுக்கிருமி, சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, இரான் உள்ளிட்ட ஏறத்தாழ முப்பது நாடுகளில் பரவியுள்ளது. (UCAN)
இதற்கிடையே, வட இத்தாலியிலுள்ள பல மறைமாவட்டங்கள், அடுத்த அறிவிப்பு விடுக்கப்படும்வரை, அனைத்துப் பங்குகளில் திருப்பலிகள், திருமுழுக்கு அருளடையாளங்கள், சிலுவைப்பாதை பக்தி முயற்சிகள், பொதுக் கூட்டங்கள் போன்ற அனைத்தையும் இரத்து செய்துள்ளன.
பிப்ரவரி 24, இத்திங்கள் நிலவரப்படி, சீனாவில் 508 பேர் புதிதாக கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றால் 2,663 பேர் இறந்துள்ளனர் மற்றும், 77,000த்துக்கு அதிகமானோர் தாக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
Comments are closed.